வேத நாயகம் சாஸ்திரியார்.
தஞ்சை மகாராஜா சரபோஜி IV மன்னனும் வேதநாயகம் சாஸ்திரியாரும் ஒரே பள்ளியில் படித்த தோழர்கள்.
1820 ஆம் ஆண்டு சரபோஜி மன்னரான பின்பு, சிறந்த கவிஞரான வேதநாயகம் சாஸ்திரியார் அரசவை புலவராகப் பணியமர்த்தப்பட்டார்.
அக்காலத்தில் ஒரு முறை மன்னர் சரபோஜி “நீங்கள் எனது கடவுள் தஞ்சைப் பிரகதீஸ்வரரைத் துதித்து ஒரு ஒரு பாடல் பாடவேண்டும்” என கட்டளையிட்டார்.
வேதநாயகம் சாஸ்திரிகள் திடுக்கிட்டார். அவர் இயேசுவைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் மகிமைப் படுத்தும் பாடலைப் பாடுவதில்லை என சிறுவயதிலேயே முடிவெடுத்திருந்தார்.
ஒரு புறம் நண்பரான நாட்டின் மீது சகல அதிகாரமும் கொண்டிருந்த சரபோஜி மன்னர்! மறுபுறம் தான் ஏற்றுக் கொண்ட இயேசு.
ஆனால் அரசவையில் மன்னர் கராராகச் சொல்லிவிட்டார். மன்னரின் இந்த கட்டளைக்குக் காரணம் அவருடன் கூட இருந்த மற்ற அதிகாரிகள் என்பதை சாஸ்திரியார் புரிந்து கொண்டார்.
“எங்கள் கடவுளை நீ புகழ்ந்து பாடுவதை நாங்கள் கேட்கவேண்டும்” என அதிகாரிகள் அவருடைய வெந்த மனதில் வேல் வார்த்தைகளை வீசினார்கள்.
அந்த சூழலில் பதில் சொல்ல முடியாத சாஸ்திரியார் மௌனமாய் விடைபெற்றார்.
அவர் வீடு சென்றார். மனவாட்டத்தைக் கண்ட மனைவி என்னவென விசாரித்தாள். சாஸ்திரியார் நடந்ததைச் சொன்னார். மனைவிக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. மன்னர், வேலை, கணவரின் உயிர், மரியாதை மற்றும் அவருடைய ஆன்மீக வாழ்க்கை! இப்படி எல்லா சிந்தனைகளும் அவளையும் ஆட்கொண்டன.
சாஸ்திரியார் காகிதம், பேனா சகிதம் தனது அறைக்குச் சென்றார். பாடலை எழுதினார்.
மறுநாள் அரசவையில் எல்லோரும் அவருடைய பாடலைக் கேட்க ஆயத்தமாய் இருந்தார்கள். "பாடும்….." என மன்னர் கட்டளையிட்டார். சாஸ்திரியார் தான் எழுதி வைத்திருந்த காகிதத்தை விரித்தார். பாடத் துவங்கினார்:
இயேசுவையே துதிசெய் – நீ மனமே
இயேசுவையே துதிசெய் – கிறிஸ்
தேசுவையே துதிசெய் நீ மனமே
இயேசுவையே துதிசெய்
மாசணுகாத பராபர வஸ்து
நேசக்குமாரன் மெய்யான கிறிஸ்து
அந்தர வான் தரையுந்தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரானந்தன்
எண்ணின காரியம் யாவும் முகிக்க
மண்னிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க
அறை சட்டென அமைதியானது! மன்னரின் கட்டளை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்ல அதற்குப் பதிலாய் மீண்டும் இயேசுவைப் போற்றி ஒரு பாடல் பாடப்பட்டிருக்கிறது! என்ன நடக்கும்?
சாஸ்திரியாரின் தலை உருளுமா? வெளியே எறியப்படுவாரா? மன்னரின் கோபத்தில் சிதைந்து போவாரா?
அவையில் இருந்தவர்கள் நகம் கடித்துக் காத்திருந்தனர்.
மன்னரோ கைதட்டினார்!
"உம்முடைய ஆன்மீக ஆழத்தைப் பாராட்டுகிறேன். நீர் இயேசுவை மட்டுமே புகழ்ந்து பாடலாம். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நீங்கள் பாடலாம். இது மன்னனின் அனுமதி! யாரும் உங்களைத் தடுக்க முடியாது. எதைவிடவும் பெரிது நீங்கள் கொண்ட இறை விசுவாசம். அதை நான் மதிக்கிறேன்" என்றார்.
சாஸ்திரியார் மகிழ்ந்தார். தனக்கு எதிராய் எழுந்த சதியை ஒரு வரமாய் மாற்றிய இறைவனைப் புகழ்ந்தார்.
உங்கள் சபையில் இந்த பாடலை பாடி இருக்கிறீர்களா ?
கர்த்தாவே இப்படிப்பட்ட மனிதர்களை எங்கள் மாநிலத்துக்கு தந்தபடியால் நன்றி !
Comments
Post a Comment