அமைதியில் உடன் வாழ்வு: சகிப்பற்ற உலகில் கிறித்துவின் அன்பை பகிர்தல் (306) Peaceful Coexistence: Sharing Christs Love in a World of Intolerance. தானியேல் 6:1-17 கொலேசையர்3:12-17, திருப்பாடல் 120, லூக்க 9:51-56

முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," அமைதியில் உடன் வாழ்வு: சகிப்பற்ற உலகில் கிறித்துவின் அன்பை பகிர்தல்" சர்வதேச அரசியலில், குறிப்பாக 1954-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா இடையே கையெழுத்தான பஞ்சசீலக் கொள்கைகளில் (Panchsheel) 'அமைதியில் உடன் வாழ்வு' ஒரு முக்கியக் கோட்பாடாக வலியுறுத்தப்பட்டது. ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடாமல் இருப்பதும், சமத்துவத்துடன் பழகுவதும் இதன் முக்கிய அம்சங்களாகும்.வெவ்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் மற்றும் அரசியல் கொள்கைகளைக் கொண்ட மக்கள் அல்லது நாடுகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மதித்து, வன்முறையோ மோதலோ இன்றி இணைந்து வாழும் நிலையாகும். மற்றவர்களின் நம்பிக்கைகளையும் உரிமைகளையும் ஏற்றுக்கொண்டு, பரஸ்பர புரிதலுடன் செயல்படுவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
 அமைதியில் உடன் வாழ்வு என்பது வேற்றுமைகளைக் கடந்து, பிறரை ஏற்றுக்கொண்டு, நீதியுடனும் சகோதரத்துவத்துடனும் இணைந்து வாழ்வதாகும். திருவிவிலியத்தின்படி, இது வெறும் சண்டை இல்லாத நிலையை மட்டும் குறிக்காமல், கடவுளோடும் சக மனிதரோடும் படைப்புகளோடும் கொண்டிருக்கும் முழுமையான நல்லுறவைக் (Shalom / சாலோம்) குறிக்கிறது.
திருவிவிலிய அடிப்படையில் அமைதியில் உடன் வாழ்வதன் முக்கிய அம்சங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
1. பழைய ஏற்பாட்டின் பார்வை (சாலோம் - Shalom)
பழைய ஏற்பாட்டில் 'சாலோம்' (Shalom) என்ற எபிரேயச் சொல் அமைதியைக் குறிக்கிறது. இது முழுமை, நலன் மற்றும் நல்லுறவை உணர்த்துகிறது.
• சகோதர ஒற்றுமை: சகோதரர்கள் ஒற்றுமையாய் இணைந்து வாழ்வது எத்துணை நலமும் இனிமையுமானது என்று திருப்பாடல்கள் கூறுகிறது (திருப்பாடல் 133:1).
• எதிரிகளுடனும் நல்லுறவு: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றாய் வாழும் காட்சியை இறைவாக்கினர் எசாயா விவரிக்கிறார் (எசாயா 11:6). இது முரண்பட்ட இயல்புடையவர்களும் அமைதியில் இணைந்து வாழ முடியும் என்பதற்கான அடையாளமாகும்.
• நீதியின் விளைவு: நீதியின் செயலாகவே அமைதி மலரும் என எசாயா 32:17 குறிப்பிடுகிறது. நீதியும் நேர்மையும் இல்லாத இடத்தில் உண்மையான உடன் வாழ்வு சாத்தியமில்லை.
2. புதிய ஏற்பாட்டின் பார்வை (இயேசுவின் போதனைகள்)
இயேசு கிறிஸ்து தம் வாழ்வு மற்றும் போதனைகள் வழியாக அமைதியில் உடன் வாழ்வதற்கான வழிகளைக் காட்டியுள்ளார்.
• அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்: மலைப்பொழிவில், அமைதி ஏற்படுத்துவோர் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 5:9). அமைதியை விரும்புவதை விட, அதை உருவாக்குவதே முக்கியம்.
• பகைவரையும் அன்பு செய்தல்: தங்களுக்குத் தீமை செய்பவர்களையும் மன்னித்து அன்பு செய்யுமாறு இயேசு போதித்தார் (மத்தேயு 5:44). இது பழிவாங்கும் உணர்வை நீக்கி உடன் வாழ்விற்கு வழிவகுக்கிறது.
• பிரிவினைச் சுவர்களைத் தகர்த்தல்: கிறிஸ்து தமது சிலுவைப் பலியின் வழியாக யூதர் மற்றும் பிற இனத்தவர் இடையே இருந்த பகைமை என்னும் சுவரைத் தகர்த்து, இருவரையும் ஒன்றாக்கினார் (எபேசியர் 2:14).
தமிழ்நாட்டில் "பிரிவினை சுவர்கள்" (Caste Walls அல்லது தீண்டாமைச் சுவர்கள்) என்பது ஆதிக்கச் சாதியினருக்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே குடியிருப்புப் பகுதிகளைப் பிரிப்பதற்காக எழுப்பப்படும் உயரமான சுற்றுச்சுவர்களைக் குறிக்கிறது. சமத்துவம் மற்றும் சமூக நீதிக்குப் பெயர் பெற்ற தமிழ்நாட்டின் சில கிராமப்புறங்களில் இத்தகைய சுவர்கள் இன்றும் ஒரு கசப்பான சமூகப் பிரச்சினையாக நீடிக்கின்றன.
1. சகிப்பற்ற உலகில் தானியேல்.Daniel in an Intolerant World" தானியேல் 6:1-17 
நண்பர்களே! தானியேல் 6:1-17 குறித்த சீர்திருத்த இறையியலாளர் ஜான் கால்வின் (John Calvin) அவர்களின் விளக்க உரை,   கடவுளுடைய பராமரிப்பு (Providence), மனிதர்களின் பொறாமை, மற்றும்  கடவுளுக்கு கீழ்ப்படிதலின் மேன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.
பாபிலோனிய பேரரசன்  நேபுகாத் நேச்சர் காலத்தில்  யூதர்கள் சிறைபிடி க்கப்பட்டு பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். பாபிலோனியப் பேரரசு வீழ்ச்சியடைந்த பிறகு, மேதிய-பெர்சியப் பேரரசு அதிகாரத்திற்கு வந்தது. இந்த நிகழ்வு கி மு.539-க்குப் பிந்தைய காலத்தில் நடந்தது.
 தரியு  அரசரின் ஆட்சி: மேதியனான தரியு (Darius the Mede) பாபிலோனின் ஆட்சியைப் பொறுப்பேற்றார். அவர் தனது பரந்த  பேரரசை திறம்பட நிர்வகிக்க 120 தண்டல்காரர்கலை (Satraps), அவர்களைக் கண்காணிக்க 3 பிரதானி களையும் நியமித்தார்.
 இந்தச் சம்பவம் நடந்தபோது தானியேலுக்கு சுமார் 80 வயதுக்கு மேல் ஆகியிருக்கும். நேபுகாத்நேச்சார்  காலத்திலிருந்தே அவர் உயர்பதவிகளில் பணியாற்றி, பல ஆட்சி மாற்றங்களைக் கண்ட அனுபவசாலியாக இருந்தார்.
மற்ற பிரதானிகள் மற்றும் தேசாதிபதிகளை விட தானியேல் மிகுந்த திறமைசாலியாகவும், நேர்மையானவராகவும் இருந்தார். அரசரின் சொத்துக்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாதவாறு அவர் நிர்வாகத்தைக் கவனித்தார்.
தானியேலின் நம்பகத்தன்மையைக் கண்ட தரியு  அரசர், அவரை முழு  பேரரசுற்கும் ஒரே தலைவராக உயர்த்தத் திட்டமிட்டார். இதுவே மற்ற அதிகாரிகளின் பொறாமைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
 ஒரு யூத அடிமையாக வந்தவர் தங்களுக்கு மேலாக உயர்த்தப்படுவதை மேதிய-பெர்சிய அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், தானியேல் நேர்மையாக இருந்ததால் அவர்களால் ஊழல் செய்ய முடியாமல் போனது.
குற்றம் காண முடியாத வாழ்க்கை: தானியேலின் நிர்வாகத்திலோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ எந்தத் தவறையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவரது ஆழ்ந்த இறைபக்தியையே (யூத மதச் சடங்குகள்) அவருக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தத் தீர்மானித்தனர்.
மேதிய-பெர்சிய சட்ட முறை: மேதியர்கள் மற்றும் பெர்சியர்களின் சட்டப்படி, அரசர் ஒருமுறை கையொப்பமிட்டு முத்திரையிட்ட கட்டளையை அரசராலேயே கூட மாற்றவோ ரத்து செய்யவோ முடியாது.
 பெருமையைப் பயன்படுத்துதல்: அதிகாரிகள் தரியு அரசனின் தற்பெரு மையைத் தூண்டி, 30 நாட்களுக்கு அரசரைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாரும் விண்ணப்பம் செய்யக் கூடாது என்ற சட்டத்தைக் கொண்டு வந்தனர். தானியேல் தினமும் மூன்று முறை எருசலேமை நோக்கி இறைவேண்டல் .செய்வதை.நன்கு அறிந்தே அவர்கள் இந்தச் சூழ்ச்சியைச் செய்தனர்.
யூதர்களின் நன்மைக்காக உயர்வு. தரியு அரசர் 120 தண்டல்காரர்களுக்கு மேலாக நியமித்த மூன்று பிரதானிகளில் தானியேலை ஒருவராகத் தேர்ந் தெடுத்தது, தனிப்பட்ட மனித மேன்மைக்காக அல்ல. சிறையிருப்பிலிருந்த தன் மக்களாகிய யூதர்களுக்கு ஆதரவாகத் தானியேலைப் பயன்படுத்துவதற் காகவே கடவுள் அவரை உயர்த்தினார் எனக் கால்வின் விளக்குகிறார்.
 தானியேலுக்குள் இருந்த விசேஷித்த ஆவி என்பது தேவனால் அருளப்பட்ட ஞானமும் உண்மையும் ஆகும். இதுவே மற்ற அதிகாரிகளின் பொறாமைக்குக் காரணமாக அமைந்தது.
பொறாமை ஒருவரின் மன அமைதியையும், உறவுகளையும், தனிப்பட்ட வளர்ச்சியையும் சிதைக்கும் ஆபத்தான உணர்வாகும். பிறரின் வளர்ச்சியைக் கண்டு மனம் வருந்துவது, தம்மிடம் உள்ள நன்மைகளை மறக்கச் செய்து வாழ்க்கையைத் துன்பமாக்குகிறது.
தரியு அரசரின் மடமை.: முப்பது நாட்களுக்கு அரசரைத் தவிர வேறு எந்தத் கடவுளிடமும் விண்ணப்பம் பண்ணக்கூடாது என்ற கட்டளை, தரியுவின் தற்பெருமையைத் தூண்டிவிடப் போடப்பட்ட வலையாகும். தன்னை ஒரு கடவுளைப் போல உயர்த்திய இந்த ஆலோசனைக்குத் தரியு இணங்கியது அவருடைய அறியாமையையும் பலவீனத்தையும் காட்டுகிறது.
தானியேலின் உறுதியான இறை வேண்டலும் விசுவாசமும் (வசனம் 10)
 வெளிப்படையான சாட்சி. அரசரின் கட்டளை கையெழுத்தானதை அறிந்த பிறகும், தானியேல் சன்னல்களைத் திறந்து வைத்து ஜெபித்தது வீண் பிடிவாதம் அல்ல. தன் விசுவாசத்தை மறைப்பது கடவுளை மறுதலிப்பதற்குச் சமம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
எருசலேமை நோக்கி இறைவேண்டல். கடவுளுடைய ய வாக்குத்தத். தங்களையும், தேவாலயத்தையும் நினைவுகூர்ந்து விசுவாசத்துடன் ஜெபிப்பதன் அடையாளமாகவே தானியேல் எருசலேமை நோக்கி முழங்காலிட்டார்.
ஏன் எருசலேமிய நோக்கி இறை வேண்டுதல் செய்தார்?
  Why did Daniel pray towards Jerusalem?
சாலமோனின் இறை வேண்டுதலும் கட்டளையும்.:
தேவாலயத்தைக் கட்டி முடித்த அரசர் சாலமோன், யூதர்கள் எந்தத் தேசத்தில் இருந்தாலும் எருசலேம் நகரத்தையும், அந்த ஆலயத்தையும் நோக்கி ஜெபிக்கும்போது இறைவன் அவர்களின் மன்றாட்டைக் கேட்க வேண்டும் என வேண்டிக்கொண்டார் (1 இராஜாக்கள் 8:44, 48).
கடவுளின் ஆலயம் இருந்த இடம் என்பதாலும், இறைவனின் ஆசீர்வாதமும் பிரசன்னமும் நிறைந்த புனித பூமி என்ற நம்பிக்கையாலும் எருசலேமை நோக்கி இறைவேண்டல் செய்யும் வழக்கம் உருவானது.
 தானியேல் கடவுளுக்கே முதலிடம். 
பூமிக்குரிய அரசர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியது கடமையே என்றாலும், அரசனின் கட்டளை கடவுளுடைய கட்டளைக்கு எதிராக நிற்கும்போது, தேவனுக்கே முதலில் பயந்து கீழ்ப்படிய வேண்டும் என்பதைக் கால்வின் வலியுறுத்துகிறார்.
 அரசரின் இயலாமையும் குற்றச்சாட்டும் (வசனங்கள் 11–15)
அன்பர்களே!
பகைவர்களின் அவசரம். தானியேலைக் குற்றப்படுத்தத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள், அரசர் தன் தவறை உணர்ந்து பின்வாங்குவதற்கு முன்பே அவரைத் தண்டிக்க அவசரப்பட்டனர்.
தரியுவின் கோழைத்தனம். தானியேல் நிரபராதி என்பதை அறிந்தும், அவரைக் காப்பாற்ற மாலை வரை பிரயாசப்பட்டும், இறுதியில் தன் பிரபுக்களுக்குப் பயந்து தரியு சரணடைந்தார். ஒரு அரசன் நீதியைக் காப்பதற்குப் பதிலாகத் தன் பதவியையும் கௌரவத்தையும் காத்துக்கொள்ள அநீதிக்குத் துணைபோனதைக் கால்வின் கடுமையாக விமர்சிக்கிறார்.
இறுதியாக, 
சிங்கக் கெபியும் முத்திரையிடுதலும் (வசனங்கள் 16–17)
அரசரின் அரைகுறை விசுவாசம். "நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் கடவுள் உன்னைத் தப்புவிப்பார்" என்று தரியு கூறியது முழுமையான விசுவாசத்திலிருந்து வந்ததல்ல. தன் மனசாட்சியின் உறுத்தலைக் குறைத்துக்கொள்ளவும், தன் இயலாமையை மறைக்கவுமே அவர் அவ்வாறு பேசினார் எனக் கால்வின் குறிப்பிடுகிறார்.
கடவுளுடைய மகிமைக்கான முத்திரை. கெபியின் வாசலில் கல் வைக்கப்பட்டு அரசர் மற்றும் பிரபுக்களின் முத்திரை இடப்பட்டது, மனிதப் பார்வையில் தானியேலின் மரணத்தை உறுதி செய்வதாக இருந்தது. ஆனால், இந்த முத்திரையே பின்னால் தானியேல் அற்புதமாகக் காப்பாற்றப்பட்டபோது, அதில் எந்த மனிதத் தலையீடும் இல்லை என்பதையும், அது முழுக்க முழுக்க கடவுளுடைய வல்லமையே என்பதையும் நிரூபிக்கும் சாட்சியாக மாறியது.
மனித சட்டங்களை விட கடவுளுக்குக் கீழ்ப்படிவதே மேலானது மற்றும் உண்மையான விசுவாசத்திற்குச் சோதனைகள் வரும் என்பதாகும். தானியேலின் நேர்மையையும், ஆபத்தான சூழ்நிலையிலும் அவர் கடவுளிடம் கொண்டிருந்த அசைக்க முடியாத இறைவேண்டல் வாழ்க்கையையும் இப்பகுதி வெளிப்படுத்துகிறது.
2. சகிப்பற்ற உலகில் கிறிஸ்துவின் சாயலை தரித்திருத்தல்.Reflecting the image of Christ in an intolerant world" கொலோசெயர் 3:12-17.
 நண்பர்களே!
கொலோசெயர் 3:12-17 குறித்த இறையியலாளர் ஜான் கால்வின் (John Calvin) அவர்களின் விளக்கவுரை, கிறிஸ்துவின் சுபாவத்தைத் தரித்துக்கொள்வதும், சபையில் அன்பும் சமாதானமும் ஆளுகை செய்வதும் பற்றியதாகும். பழைய பாவ சுபாவத்தைக் களைந்து, புதிய மனிதனாக வாழும் விசுவாசிகளின் நடைமுறை வாழ்க்கையை இது விவரிக்கிறது. திருத்தூதர் பவுல் அடிகளார் கொலோசே நகரத்திலிருந்த திருச்சபைக்கு எழுதிய நிருபத்தின் முக்கியமான நடைமுறைப் பகுதியாகும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் பழைய பாவ வாழ்க்கையைக் களைந்துவிட்டு, புதிய மனிதனின் குணாதிசயங்களை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதைப் பவுல் இங்கு விளக்குகிறார்.
கி.பி. 60-62 காலகட்டத்தில் பவுல் ரோம் சிறையிலிருந்தபோது இந்த நிருபத்தை எழுதினார். கொலோசே சபையில் நுழைந்திருந்த தவறான போதனைகளை (ஞானவாதம், யூத சடங்காச்சாரங்கள்) எதிர்த்து, கிறிஸ்துவின் மேன்மையை நிலைநாட்டுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.. ஆதி திருச்சபையில் ஞானஸ்நானம் பெறுபவர்கள் தங்கள் பழைய ஆடைகளைக் கழற்றிவிட்டு, புதிய வெள்ளை ஆடைகளை அணிந்துகொள்ளும் வழக்கம் இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு, பழைய பாவ சுபாவங்களைக் களைந்து (கொலோசெயர் 3:5-9), கிறிஸ்துவின் நற்பண்புகளை ஆடையாகத் தரித்துக்கொள்ள வேண்டும் என்று பவுல் உருவகப்படுத்துகிறார்.
அக்கால கொலோசே சபையில் யூதர்கள், கிரேக்கர்கள், அடிமைகள் மற்றும் சுயாதீனர் எனப் பலதரப்பட்ட மக்கள் இருந்தனர் (கொலோசெயர் 3:11). இவர்களுக்குள் எந்தப் பிரிவினையும் இன்றி, ஒரே சரீரமாக அன்புடன் இணைந்து வாழ்வதற்கான வழிகாட்டுதலாக இப்பகுதி அமைந்துள்ளது.
கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தங்களின் சொந்தத் தகுதியால் அல்ல, கடவுளுடைய  கிருபையினாலேயே பரிசுத்தமாக்கப்பட்டு அவருடைய பிள்ளைகளாகத் தெரிந்துகொள்ளப்பட்டுள்ளனர். இந்த மேலான அழைப்புக்கு ஏற்றவாறு அவர்கள் வாழ வேண்டும்.
 இரக்கம், தயவு, மனத்தாழ்மை, சாந்தம் மற்றும் நீடிய பொறுமை ஆகிய ஐந்து குணங்களையும் கிறிஸ்தவர்கள் தங்கள் அன்றாட வாழ்வின் ஆடையாகத் தரித்துக்கொள்ள வேண்டும்.. மனிதர்கள் பலவீனமானவர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் குறைகள் ஏற்படுவது இயல்பு. கிறிஸ்து நமது பாவங்களை மன்னித்தது போல, நாமும் பிறருடைய தவறுகளைப் பொறுமையுடன் தாங்கி மன்னிக்க வேண்டும்.
அன்பு இல்லாத இடத்தில் மற்ற நற்குணங்கள் நிலைத்திருக்க முடியாது. சபையின் அனைத்து அங்கத்தினர்களையும் ஒரே உடலாக இணைத்துப் பிணைக்கும் சக்தியாக அன்பு செயல்படுகிறது.
விசுவாசிகளின் உள்ளத்தில் எழும் சலனங்களையும் கோபங்களையும் கட்டுப்படுத்தி, கிறிஸ்துவின் சமாதானம் ஒரு நடுவரைப் போல ஆளுகை செய்ய வேண்டும்.
கிறிஸ்தவர்கள் தனித்தனி நபர்களாக அல்லாமல், கிறிஸ்துவின் ஒரே சரீரத்தின் உறுப்புகளாகச் சமாதானத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக அவர்கள் எப்போதும் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவின் உபதேசம் விசுவாசிகளின் உள்ளத்தில் ஆழமாகவும், எல்லா ஞானத்தோடும் தங்கியிருக்க வேண்டும். இது வெறும் அறிவாக மட்டுமல் லாமல், வாழ்க்கையை வழிநடத்தும் சக்தியாக இருக்க வேண்டும்.
திருச்சபையார் சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப் பாட்டு களினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, கர்த்தரை உள்ளத்தின் ஆழத் திலிருந்து துதிக்க வேண்டும்.
இறுதியாக,
விசுவாசிகள் பேசும் வார்த்தையும், செய்யும் செயலும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலேயே அமைய வேண்டும்.கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒவ்வொரு செயலும் கடவுளுடைய மகிமைக்காகவும், கிறிஸ்துவின் மூலமாகப் பிதாவாகிய கடவுளுக்கு நன்றி செலுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
3.சகிப்பற்ற உலகில் கிறிஸ்துவின் சாயல்.Reflecting Christ in an Intolerant World. லூக்கா 9:51–56.
 அன்பர்களே! இயேசு தனது இறுதிப் பயணமாக எருசலேமை நோக்கி உறுதியுடன் புறப்படும் தருணத்தையும், வழியில் சமாரிய கிராம மக்களால் அவர் நிராகரிக்கப்படுவதையும் விவரிக்கிறது.
ஏன் சமாரியர்கள் இயேசுவைத் தடுத்தார்கள்?
Why did Samarians oppose Jesus?
யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த மத மற்றும் இன ரீதியான பகைமையே இதற்கு முக்கியக் காரணமாகும்.
1.வழிபாட்டுத் தலம் குறித்த சர்ச்சை.
உண்மையான தேவாலயம் எருசலேமில் இருக்க வேண்டும் என்று யூதர்கள் நம்பினர். ஆனால், தங்களின் கெரிசீம் மலையே (Mount Gerizim) உண்மையான வழிபாட்டுத் தலம் என்று சமாரியர்கள் உறுதியாக நம்பினர். இயேசு எருசலேமை நோக்கிச் செல்வது, எருசலேம் ஆலயத்தை அவர் ஆதரிப்பதாகச் சமாரியர்களுக்குத் தோன்றியது.
2.பண்டிகைக் காலப் பயணம்.
இயேசு ஒரு யூதப் பண்டிகைக்காக எருசலேமுக்குச் சென்று கொண்டிருந்தார். தங்கள் வழிபாட்டு முறையை நிராகரிக்கும் ஒரு பண்டிகைக்குச் செல்லும் யூதக் குழுவிற்குத் தங்கள் ஊரில் இடமளிக்கச் சமாரியர்கள் விரும்பவில்லை.
3.பல நூற்றாண்டுகாலப் பகைமை.
 சமாரியர்கள் யூதர்களுக்கும் பிற இனத்தவருக்கும் பிறந்த கலப்பினத்தவர் என்பதால், யூதர்கள் அவர்களைத் தீண்டத்தகாதவர்களாகவும் கீழானவர்களாகவும் கருதினர். மேலும், இயேசுவின் காலத்திற்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு யூத ஆட்சியாளர் கெரிசீம் மலையில் இருந்த சமாரியர்களின் ஆலயத்தை இடித்துத் தள்ளினார். இந்த வரலாற்றுக் காயங்களும் அவமானங்களும் சமாரியர்களின் மனதில் ஆழமான வெறுப்பை ஏற்படுத்தியிருந்து.
லூக்கா 9:51–56 குறித்த ஜான் கால்வின் (John Calvin) விளக்கவுரையின் முக்கியக் கருத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
 இயேசு தம் மரணத்தைக் கண்முன்னே கண்டபோதிலும், இயல்பான மனித அச்சத்தைக் கடந்து துணிச்சலோடு எருசலேமை நோக்கிச் சென்றார். இது கிறிஸ்து மரண பயத்தை வென்றதைக் காட்டுகிறது. இயேசு தமக்கு முன்னே தூதர்களை அனுப்பியது ஆடம்பர விருந்தையோ மாளிகையையோ ஏற்பாடு செய்ய அல்ல; தம்முடன் வரும் பெரிய கூட்டத்தைப் பற்றி முன்கூட்டியே அறிவிப்பதற்கே ஆகும். சமாரியர் இயேசுவை ஏற்காதபோது, யாக்கோபும் யோவானும் வானத்திலிருந்து நெருப்பை வரவழைக்கக் கேட்டனர். கால்வினின் கூற்றுப்படி, "நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்று அறியீர்கள்" என்ற இயேசுவின் பதில், அந்த இரு சீடர்களின் கட்டுக்கடங்காத கோபத்தை அடக்கியதோடு மட்டுமல்லாமல், நம் உணர்ச்சிவசப்பட்ட கோபத்திற்கு அடிமையாகக் கூடாது என்ற பொது விதியையும் நமக்குக் கற்றுத் தருகிறது.
இறுதியாக,
நம்மைப் புறக்கணிப்பவர்களையும் வெறுப்பவர்களையும் பழிவாங்க நினைப்பது கிறிஸ்தவப் பண்பு அல்ல. கோபத்தைத் தவிர்த்து அமைதியாகக் கடந்து செல்வதே சிறந்த வழி என்பதை இயேசு கற்றுக்கொடுக்கிறார். இந்த உலகம் சகிப்புத்தன்மை இல்லாத உலகம். சகிப்புத்தன்மை அற்ற மக்கள் வாழும் உலகம் இவர்களோடு இனைந்து வாழ்கின்ற பொழுது நமக்கு சகிப்பு தன்மை மிக அவசியம். அனைவரையும் நேசித்து வாழ கடவுள் நமக்கு அருள் புரிவாராக ஆமென்

Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com





            தானியேல் எருசலேமை நோக்கி மூன்று முறை இறைவேண்டல்    
                                                         செய்வது

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80