நம்பிக்கையுடன் இன்னல்களில் மீண்டேறுதல்.(307) Transcending Adversity With Hope. எரேமியா: 33: 10-16, 1 தெசலோனிக்கர் 3:6-10, திருப்பாடல்கள் : 68:11-20, லூக்கா: 1:39-45.
முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,'"நம்பிக்கையுடன் இன்னல்களில் மீண்டேறுதல்"
என்பது நம்பிக்கையுடன் இன்னல்களில் மீண்டெழுதல்" (Resilience with Hope) என்பது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள், தோல்விகள் மற்றும் நெருக்கடிகளைக் கண்டு துவண்டுவிடாமல், எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற நேர்மறையான எண்ணத்துடன் அவற்றிலிருந்து மீண்டும் எழுந்து வருவதைக் குறிக்கிறது.புயல் அடிக்கும்போது வளைந்து கொடுத்து, புயல் ஓய்ந்ததும் மீண்டும் நிமிர்ந்து நிற்கும் மூங்கிலைப் போல வாழ்வதே "நம்பிக்கையுடன் இன்னல்களில் மீண்டெழுதல்" ஆகும்.
பழைய ஏற்பாடு காட்டும் நம்பிக்கை: Hope in the Old Testament.
அன்பர்களே!
நம்பிக்கை என்று கூறுகின்ற போது இறைவாக்கினர் செக்கரியா 9:12ல் கூறிய "நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்; இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்". என்ற இறை வார்த்தையை நாம் இங்கு நினைவு கூறுவோம்.கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் பாபிலோனிய மன்னன் நேபுகாத்நேச்சாரால் எருசலேம் அழிக்கப்பட்டு, யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். They were prisoned in both Babilonian and Persion Kingdom(பின்னர் பெர்சியப் பேரரசின் காலத்தில் சிலர் தாயகம் திரும்பியிருந்தாலும், பலர் இன்னும் அந்நிய தேசங்களில் சிதறி, பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வந்தனர்) இத்தகைய சிறைப்பெட்ட மக்களுக்கு நம்பிக்கை தருகின்ற இறைவாக்காக இது அமைகிறது.
அதாவது,
துன்பத்திலும் சிறையிருப்பிலும் இருந்த இஸ்ரவேல் மக்களுக்குத் கடவுள் அளித்த நம்பிக்கை மற்றும் இரட்டிப்பான ஆசீர்வாதத்தின் வாக்குத்தத்தமாகும்.
நம்பிக்கையுடைய சிறைகள் என்பது அந்நிய நாடுகளில் சிறைப்பிடிக்கப்பட்டு, தண்ணீரில்லாத குழியைப் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், கடவுள் தங்களை விடுவிப்பார் என்ற நம்பிக்கையை இழக்காத மக்களை இது குறிக்கிறது.பண்டைய காலத்தில் தண்ணீர் வற்றிய கிணறுகள் சிறைச்சாலைகளாகப் பயன்படுத்தப்பட்டன; குழிகள் மிகக் கொடுமையான சிறைச்சாலைகளாகப் பயன்படுத்தப்பட்டன (இறைவாக்கினர் எரேமியா
இவ்வாறான குழியில் போடப்பட்டார்). இது அவர்களின் நம்பிக்கையற்ற, துயரமான சிறையிருப்பு நிலையைக் குறிக்கிறது.
அரணுக்குத் திரும்புங்கள் என்பது ஆபத்தான சூழ்நிலையிலிருந்து பாதுகாப்பான கோட்டைக்கு (எருசலேமுக்கும், கடவுளுடைய பாதுகாப்பிற்கும்) திரும்பி வாருங்கள் என்ற அழைப்பாகும்.
இரட்டிப்பான நன்மை தருவேன் என்பது இழந்தவை அனைத்திற்கும் ஈடாகவும், அனுபவித்த துன்பங்களுக்குப் பதிலாகவும் இரண்டு மடங்கு ஆசீர்வாத த்தையும் மகிழ்ச்சியையும் கடவுள் திரும்பத் தருவார் என்பதைக் குறிக்கிறது.
அதை இன்றைக்கே தருவேன் என்றும், இந்த வாக்குத்தத்தம் எதிர்காலத்திற்கு மட்டுமல்லாமல், அவர்கள் கடவுளிடம் திரும்பும் அந்தக் கணத்திலிருந்தே செயல்படத் தொடங்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
புதிய ஏற்பாடு காட்டும் நம்பிக்கை: Hope in the New Testament.
அன்பர்களே!
நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து (யோவான் 16:33ல், "உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்ற நம்பிக்கை வார்த்தையை தன் சீடர்களுக்கும், நமக்கும் தருகிறார்.
எபிரெயர் திருமுகம் 12:1,2 ல்,எனவே, "திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு(நம்பிக்கையோடு)ஓடுவோமாக.
அவ்வாறே,"நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்". என்று எபிரெயர் திருமுகம் வலியுறுத்துகிறது.
1.பாழான தேசம் மீண்டும் செழிக்கும் என்ற நம்பிக்கை.The hope that a ruined nation will prosper again."எரேமியா 33:10-16 .
நண்பர்களே மெத்தடிஸ்ட் திருச்சபையை தோற்றுவித்த இறையியலாளர் ஜான் வெஸ்லி அவர்கள் எரேமியா 33:10-16 (Explanatory Notes on the Whole Bible) இந்த பகுதியை மிகச் சிறப்பாக விளக்கி இருக்கிறார்.
பாபிலோனியப் படையெடுப்பால் மனிதர்களும் மிருகங்களுமின்றிப் பாழாய்க் கிடந்த யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும், மீண்டும் மகிழ்ச்சியும், திருமண கொண்டாட்டங்களும், கர்த்தருடைய ஆலயத்திற்கு நன்றி பலிகளைக் கொண்டு வரும் சத்தமும் கேட்கும் என்ற நம்பிக்கையை ஆண்டவர் வாக்களிக்கிறார். மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை மீண்டும் எண்ணும் அளவிற்கு, நாடு பாதுகாப்பாகவும் செழிப்பாகவும் மாறும் என்பதை இது குறிக்கிறது. இது சிறையிருப்பிலிருந்து திரும்பிய யூதர்களுக்குக் கிடைத்த உடனடி நம்பிக்கையின் ஆசீர்வாதமாகும். இறையியளாளர் ஜான்
வெஸ்லி தனது விளக்கத்தில், "இதுவரை தாவீதின் குலத்தில் வந்த பெரும்பாலான அரசர்கள் அநீதியுள்ளவர்களாகவே இருந்தார்கள்; ஆனால் சிறையிருப்பிற்குப் பிறகு, தமக்குப் பயப்படுகிறவர்களைப் பாதுகாக்கவும் ஆளவும், நாட்டில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிக்கும் தாவீதின் ஒரு 'நீதியின் கிளையை' கடவுள் எழும்பப் பண்ணுவார்" என்று நம்பிக்கையுடன் குறிப்பிடுகிறார்.இந்த 'நீதியின் கிளை' என்பது தாவீதின் குலத்தில் வரப்போகிற மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவையே நேரடியாகக் குறிக்கிறது.
அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். "யாவே சித்கேனூ" என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
(யாவே சித்கேனூ (Jehovah Tsidkenu) என்பதற்கு "நமது நீதியாகிய கர்த்தர்" (The Lord Our Righteousness) என்று பொருள். இது பழைய ஏற்பாட்டில் காணப்படும் கடவுளின் முக்கிய நாமங்களில் ஒன்றாகும்.இது 'யாவே' (கர்த்தர்) மற்றும் 'சித்கேனூ' (நமது நீதி) ஆகிய இரு எபிரேயச் சொற்களின் இணைப்பாகும்.
இஸ்ரவேல் மக்கள் அநீதியான அரசர்களால் வழிநடத்தப்பட்டு, பாபிலோனிய சிறையிருப்புக்குச் செல்லும் சூழலில் இருந்தபோது, கடவுள் அவர்களுக்கு ஒரு நீதியுள்ள அரசரை (மேசியாவை) எழுப்புவேன் என்று வாக்களித்தார். அந்த அரசரின் பெயரே 'யாவே சித்கேனூ' என அழைக்கப்படும் என்று எரேமியா முன்னுரைத்தார்.எரேமியா 23:6 )
யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும் என்பது முதலில் பாபிலோனியச் சிறையிருப்பிலிருந்து யூதர்களுக்குக் கிடைத்த தற்காலிக விடுதலையைக் குறிக்கிறது. மேலும், இது கடவுடைய உண்மையான இஸ்ரவேலருக்கு (விசுவாசிகளுக்கு) கிறிஸ்துவின் மூலம் கிடைக்கப்போகும் நித்திய, ஆவிக்குரிய இரட்சிப்புக்கு ஒரு முன்னடையாளமாக (Type)வும், நம்பிக்கையாகவும் உள்ளது என்று வெஸ்லி விளக்குகிறார்.
2.நம்பிக்கையுடன் மீண்டேருதல்.Bouncing back with confidence. 1.தெசலோனிக்கர் 3:6-10.
நண்பர்களே திருத்தூதர் பவுல் அடிகளார், தீமோத்தேயு தெசலோனி க்கேயாவிலிருந்து திரும்பி வந்த உடனேயே இந்த திருமுகத்தை எழுதினார். அந்த நற்செய்தியைக் கேட்ட மகிழ்ச்சி புதிதாகவும், சபையின் மீதான பாசம் உச்சத்திலும் இருந்த தருணத்தில் பவுல் இதை எழுதியதாக ஜான் வெஸ்லி குறிப்பிடுகிறார். வசனம்7ல், ஜான் கால்வின் அவர்களின் விளக்கம், திருத்தூதர் பவுல் அடிகளார் தன் சொந்தத் துன்பங்களை மறந்து, சபையின் விசுவாசத்தைக் கண்டு ஆறுதலடையும் மேய்ப்பருக்குரிய அன்பை மையப்படுத்துகிறார்.பவுல் கொரிந்து பட்டணத்தில் பலத்த எதிர்ப்புகளையும், வறுமையையும், நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியடைவதற்கு அங்கே எந்தச் சூழ்நிலையும் இல்லை; இருப்பினும், தெசலோனிக்கேயரின் நலனைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டவுடன், தன் சொந்த வேதனைகள் அனைத்தும் நீங்கிவிட்டது போல அவர் ஆறுதலடைகிறார்.சபையின் ஆவிக்குரிய நலனே ஒரு உண்மையான போதகரின் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனக் கால்வின் குறிப்பிடுகிறார். ஒரு போதகர் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும், சபை விசுவாசத்தில் நிலைத்திருந்தால் அவர் தன்னைப் பாக்கியவானாகக் கருத வேண்டும்.பவுலுக்கு ஆறுதலைக் கொடுத்தது அவர்களின் உலகப்பிரகாரமான வளர்ச்சியல்ல, மாறாக உபத்திரவங்களுக்கு மத்தியிலும் அவர்கள் கிறிஸ்துவின் மேல் வைத்திருந்த உறுதியான நம்பிக்கை மற்றும் விசுவாசமே ஆகும்.திமோத்தேயு கொண்டு வந்த செய்தி பவுலின் பாரத்தை நீக்கி, அவருக்குள் இருந்த ஆழ்ந்த கவலையைப் போக்கி, புதிய உற்சாகம், நம்பிக்கை கொடுத்ததை இந்த வசனம் காட்டுகிறது.அவ்வாறே, இறையியளாளர் ஜான் வெஸ்லியும் "உண்மையிலேயே நாங்கள் வாழ்க்கையை அனுபவிக்கிறோம்; உங்கள் மீது எங்களுக்கு அவ்வளவு பெரிய அன்பு இருக்கிறது" என்று பவுலின் உணர்வை வெஸ்லி விளக்குகிறார். விசுவாசிகள் கர்த்தருக்குள் உறுதியாக நிற்பதே ஊழியக்காரனுக்கு உண்மையான உயிர்ப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்பதே இதன் பொருள்.
ஒருமுறை கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவர்களுக்கு இனி மனிதர்களின் போதனை தேவையில்லை" என்ற தவறான எண்ணம் பவுலுக்கு இருக்கவில்லை என வெஸ்லி சுட்டிக்காட்டுகிறார். இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளும் தொடர்ந்து சத்தியத்தைக் கற்றுக்கொள்ளவும், நம்பிக்கையில் வளரவும் போதனை அவசியம் என்பதை இது காட்டுகிறது.
• பவுல் அவர்களுக்காகச் சாதாரணமாக அல்ல, மிகுந்த வாஞ்சையோடும் தாகத்தோடும் இரவும் பகலும் இறைவனிடம் மன்றாடினார். இது ஒரு உண்மையான ஆன்மீகத் தலைவருக்கு இருக்க வேண்டிய அக்கறையைக் காட்டுகிறது.எந்தவொரு மனிதனின் விசுவாசமும், நம்பிக்கையும் ஒரே நாளில் முழுமையடைவதில்லை; அது தொடர்ந்து கற்றுக்கொள்வதன் மூலமும், சவால்களை எதிர்கொள்வதன் மூலமும் வளரக்கூடியது. யோபு தனது செல்வம், பிள்ளைகள், உடல்நலம் என அனைத்தையும் இழந்த போதிலும், கடவுள் மீதான நம்பிக்கையைக் கைவிடாமல் இருந்ததால், இழந்ததை விட இருமடங்கு ஆசீர்வாதத்தைப் பெற்று மீண்டு வந்தார் (யோபு 42:10).
3.சந்தேகமின்றி நம்புவதே விசுவாசம்.Faith is believing without doubt.
லூக்கா 1:39-45.
அன்பர்களே! செக்கரியா மற்றும் எலிசபெத் ஆகியோரின் வீடு யூதேயாவின் மலைநாட்டில் உள்ள,இன்றைய எருசலேம் (Jerusalem) நகரின் மேற்குப் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமாகும்.இந்த ஊருக்கு மரியாள் விரைந்து சென்று, செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்".மரியாள் எலிசபெத்தை வாழ்த்தியபோது, வானதூதர் தனக்குச் சொன்ன காரியங்களை விவரித்துக் கூறினார்.மரியாளின் வார்த்தைகளைக் கேட்டவுடன் எலிசபெத்தின் ஆத்துமாவில் உண்டான அளவற்ற மகிழ்ச்சி அவளது உடலையும் பாதித்தது. இதனால் அவளது வயிற்றிலிருந்த குழந்தை யாகிய திருமுழுக்கு யோவான் வழக்கத்திற்கு மாறாக, மகிழ்ச்சியினால் துள்ளுவது போல அசைந்தது என்பது யோவான் பிறப்பதற்கு முன்பே பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவான் என்ற இறைவாக்கின் ஆரம்பமாகும்.
எலிசபெத் தூய ஆவியால் நிரப்பப்பட்டதால், மரியாளுக்கு நடந்த அதிசயத்தை அதாவது, அவள் மேசியாவின் தாயாகப் போகிறாள் என்பதை யாரும் சொல்லாமலேயே உடனடியாகப் புரிந்துகொண்டாள்.
அப்போது எலிசபெத் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என்றார்.
"என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வருவது எனக்கு எதினால் கிடைத்தது?" (வசனம் 43) என்று எலிசபெத் கேட்பது, வயதில் மூத்தவளாக இருந்தபோதும், கிறிஸ்துவின் முன்னிலையில் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த தாழ்மையையும் பயபக்தியையும் காட்டுகிறது.
இறையியளாளர் ஜான் வெஸ்லியின் கூற்றுப்படி, எலிசபெத் இந்த வார்த்தையைச் சொல்லும்போது, வானதூதரின் வார்த்தையை நம்பாமல் ஊமையான தன் கணவர் சகரியாவின் அவிசுவாசத்தை (unbelief of Zacharias) மனதில் வைத்திருந்திருக்கக்கூடும். சகரியா சந்தேகப்பட்ட இடத்தில், மரியாள் முழுமையாக விசுவாசித்ததால் அவள் பாக்கியவதி என்று அழைக்கப் படுகிறாள்.
இறுதியாக,
கடவுளுடைய வாக்குத்தத்தங்களைச் சந்தேகமின்றி விசுவாசிப்பதே உண்மையான ஆசீர்வாதத்திற்கு வழிவகுக்கும் என்பதையும், கிறிஸ்துவின் பிரசன்னம் விசுவாசிகளுக்குள் பரிசுத்த ஆவியின் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதையும் இந்தப் பகுதி உணர்த்துகிறது.
நம்பிக்கையுடன் இன்னல்களில் மீண்டெழுதல் என்பது, வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான சவால்கள், துயரங்கள் அல்லது தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், நேர்மறையான மனநிலையுடனும் தன்னம்பிக்கையுடனும் அவற்றை எதிர்கொண்டு, முன்பைவிட வலிமையாக மீண்டும் எழுந்து நிற்பதைக் குறிக்கிறது.ஆங்கிலத்தில் இதனை Resilience என்பர். இந்த கிறிஸ்துவின் வருகை நாட்களில் கிறித்துவிற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்து அவரின் அமைதி, மகிழ்ச்சி நிறைவாய் கிடைக்க அருள் புரிவாராக! ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com
Mary and Elizabeth Greeting eachother.
Comments
Post a Comment